ஆனந்தவிகடனின் அவதூறு

ஆனந்த விகடன்இந்தவார இதழில் அட்டைப்பட முக்கியத்துவமளித்து என் இணையதளம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.’ எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகியோரை ஜெயமோகன் இழிவுபடுத்துகிறாரா?’ என்ற தலைப்புடன். ஊரெங்கும் சுவரொட்டிகள் வேறு.

இந்த இணையதளத்தைப் படிப்பவர்களுக்கு தெரியும் இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்.

இதில் சில பகுதிகளை மட்டும் பெயர்த்தெடுத்து உள்நோக்கம் கற்பித்து நுண்ணுணர்வோ நகைச்சுவையுணர்வோ இல்லாத கும்பலை வன்முறை நோக்கி தூண்டி விடும்படியாக ஆனந்த விகடன்வெளியிட்டுள்ள இந்த கட்டுரை சற்று எதிர்பாராத ஒன்று. விகடன் பொதுவாக இம்மாதிரி சிண்டுமுடியும் வேலைகளைச் செய்வதில்லை. இதன் பின்னால் வன்மம் கொண்ட நோக்கம் உள்ளது.

ஆனால் எதிர்பார்க்கத்தக்க விஷயம், கருத்துச் சுதந்திரம், புனித பிம்பங்களை கட்டுடைத்தல், அங்கதம் என்றெல்லாம் பேசி வரும் தமிழ் சிற்றிதழாளர்களிடமிருந்து சிறு எதிர்ப்போ கண்டனமோ கூட இம்மாதிரி ஒரு வெளிப்படையான தூண்டிவிடுதலுக்கு எதிராக கிளம்பாது என்பது. வன்முறை நிகழ்ந்தால் கூட அதைக் கொண்டாடவே செய்வார்கள்.

முற்றிலும் எதிர்பார்க்க முடியாத விஷயம் விகடன் என் மறுப்பை பிரசுரிக்கும் என்பது. பிரசுரித்தால் கூட ஒரு சில சம்பந்தமில்லாத வரிகளை படத்துடன் அச்சிட்டு வைப்பார்கள்.

ஆகவே விகடனுக்கு நான் அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

மதிப்பிற்குரிய ஆனந்த விகடன் ஆசிரியருக்கு,

விகடன் பெப் 14-21 இதழில் என் இணையதளம் பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரை படித்தேன்.

என் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகளில் நமது பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையுமே அங்கதமாக விமரிசனம் செய்திருக்கிறேன். என் இலக்கிய ஆசிரியர்கள், தீவிர இலக்கியம், இலக்கிய முன்னோடிகள், சக படைபபளிகள், என் சாதி, மதம், குடும்பம் என எதுவுமே அதிலிருந்து தப்பவில்லை. அப்படித்தான் திரைப்படமும். இது இன்றைய எழுத்தின் ஒரு இயல்பாகும். இன்று இந்த அம்சம் திரைபபடங்கள் வரை வந்துள்ளது. இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ ஓர் உதாரணம். அது அங்கே ஒரு மாபெரும் வெற்றிப்படம்.

இதை எதையுமே பொருட்படுத்தாமல் சில பகுதிகளை பிய்த்துப்போட்டு உள்நோக்கம் கற்பித்து எழுதப்பட்டுள்ள தங்கள் கட்டுரை. வன்முறையை தூண்டும் உள்நோக்கம் கொண்டது. ஆபத்தானது.

கருத்து சுதந்திரத்துக்காக சிறைசென்ற வரலாறுள்ள ஆசியரைக் கொண்டிருந்த ஓர் இதழ் இதைச் செய்திருப்பதை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை

அன்புடன்

ஜெயமோகன்.

முந்தைய கட்டுரைசிதம்பரம் பகுதி நண்பர்களுக்கு
அடுத்த கட்டுரைஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்