சிற்பங்கள்:கடிதங்கள்

சைதன்யாவுக்கு நீங்கள் கைகள் பற்றிய சொன்ன உரை அசைவை கைப்பற்றுதல்வாசித்தேன். ஒரு கவிதையைப் போலிருந்தது. நல்ல அனுபவமாய் உணர்ந்தேன். உங்கள் எழுத்துக்கள் இன்னொன்றை தரவல்லது என்பதில் எனக்கு சந்தேகங்களில்லை

அய்யப்ப மாதவன் iyyappamadhavan.blogspot.com

**

அன்புள்ள ஜெ

அசைவை கைப்பற்றுதல் கட்டுரையை படித்து வருத்தம் அடைந்தேன். மிக்க உண்மை நாம் நம்முடைய சிற்பப் பாரம்பரியத்தைப்பற்றி ரொம்பக்கம்மியாகத்தான் அறிந்திருக்கிறோம். ஒன்றுமே தெரியாது என்றுதான் சொல்லவேண்டும் இல்லையா. நமக்கு யாருமே அவற்றைச் சொல்லித்தருவது இல்லை. கல்விக்கூடங்களில் நம் சிற்பப் பாரம்பரியத்தைச் சொல்லிக்கொடுத்தால் நம் பகுத்தறிவாளர்கள் மதசார்பிந்மைக்கு ஆபத்து என்று சத்தம் போடுவார்கள். இவற்றையெல்லாம் இன்று ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். நம் பிள்ளைகளுக்குச் சொல்லி வைக்கலாமென்றால் எங்கே போய் நூல்களை தேடுவது?

உலகத்தில் எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் கலைச்செல்வங்களை கொஞ்சம் கூட அறிந்திராதவர்களாக அந்த நாட்டு மக்கள் அனைவருமே இருக்கும் நிலை உண்டா என்று கேட்டால் வெட்கமே ஏற்படுகிறது. ஆனால் நாம் ஜம்பமாக நம்முடைய மதசார்பின்மையைப் பற்றி பீற்றிக்கொள்வோம். எனக்கும் ஆழமான மத நம்பிக்கை இல்லை. கடவுள் பற்றும் இல்லை. ஆனால் சிற்பங்கள் கோயில்கலைகள் மீது ஈடுபாடு உண்டு. அதுகூட இங்கே லண்டனுக்கு வந்தபிற்பாடு உண்டானதுதான் என்றுதான் சொல்லுவேன். இங்கே இவர்கள் சிலைகளை பேணிப்பேணி வைப்பதை பார்க்கும்போது இதைவிட ஆயிரம் மடங்கு நமக்கு சிலைகள் இருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. ஆனால் ஒன்றுமே தெரியாது. வேதனையாக இருக்கிறது.
சங்கர்

அன்புள்ள சங்கர்,

 

 

நம்முடைய சிலை மரபைப்பற்றி நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு. காரணம் மிக வளமான ஒரு பாரம்பரியம் பதினேழாம் நூற்றாண்டு முதல்  அப்படியே அழியவிடப்பட்டது. அதன் மரபுத்தொடர்ச்சி அழிந்தது. இன்றுகூட பெரும்பாலானவர்களுக்கு அதில் எந்த ஆர்வமும் கிடையாது. நம்முடைய சிற்பப் பாரம்பரியத்தின் பெருமையை உணர்ந்தவர்கள் ராபர்ட் ஸீவெல் [Robert Sewell ]  போன்ற வெள்ளைய கலை அபிமானிகள். அவர்கள் முயற்சி எடுத்திராவிட்டால் நம் கலைப்பொக்கிஷங்கள் இல்லாமலே ஆகியிருக்கும். ஆனந்தகுமாரசாமி போன்ற கலைவிமரிசகர்கள் நம் சிற்பக்கலையை உலகுக்கு எடுத்துச் சொன்னதைக்கேட்டுத்தான் நமக்கே ஓரளவு புரிந்தது.

டி.கோபிநாதராவ் போன்றவர்கள் இந்திய சிற்பக்கலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் சிற்பக்கலை மரபைப்பற்றி நடன காசிநாதன்,  குடவாயில் பாலசுப்ரமணியம், இரா கலைக்கோவன், அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆலயங்களைப்பற்றி தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான், பரணீதரன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். கே.ஆர்.ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய கோயில்கள்’ [சாகித்ய அக்காதமி வெளியீடு] ஒரு நல்ல தொடக்க நூல். அ.காபெருமாள் அவர்களும் செந்தீ நடராஜன் அவர்களும் இணைந்து தமிழ்ச் சிற்பக்கலை பற்றிய விரிவான கலைகக்ளஞ்சியநூல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.

இந்த எழுத்துக்களில் சிலவற்றை பள்ளிகளில் பாடமாக வைத்தாலாவது ஒரு எளிய அறிமுகம் ஏற்படும். குறைந்தபட்சம் சிற்பங்களை எப்படி ரசிப்பது என்ற புரிதலாவது வரும். சிற்பக்கலையின் நுட்பத்தை ரசிக்க தெரியாமல் நம் ஆட்கள் சிற்பங்களை தட்டியும் கொட்டியும் பார்க்கிறார்கள். அங்கே நிற்கும் கைடுகளும் அய்யர்களும் அது அபூர்வ சிலை என்பதற்கு ஆதாரமாக தட்டினால் சத்தம் கேட்கும் காதுவழியாக குச்சிவிட்டால் மூக்குவழியாக வரும் என்று அபத்தமாக எதையாவது சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் மாபெரும் பண்பாட்டுச்செல்வங்கள் பார்ப்பவரும் பராமரிப்பவரும் இல்லாமல் அழிந்துகொண்டிருக்கின்றன

ஜெ

சேட்டை

சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்

சிற்பப் படுகொலைகள்…

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்

இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ

இந்தியப் பயணம் 14 – சாஞ்சி

 

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

முந்தைய கட்டுரைகிருஷ்ணன், புலனடக்கம் :கடிதங்கள்
அடுத்த கட்டுரைமு.கு.ஜகன்னாத ராஜா:அஞ்சலி