மத்தகம்:கடிதம்

DEAR J

நீங்கள் நிறைவாக நிறைய எழுதுவதோடு கூடவே வெகு துரிதமாகவும் எழுதுகிறீர்கள்.உங்கள் வேகமான எழுத்துக்கு ஈடு கொடுத்து வாசிக்க வாசகர்களான எங்களுக்கும் கொஞ்சம் அவகாசம் தேவை தான்  என்று தோன்றி விடுகிறது சில கட்டுரைகளை வாசிக்கும்போது,மிகவும் ஆழமும் அழுத்தமும் கொண்ட உங்கள் படைப்புகளை பூரணமாக வாசித்து அவற்றின் சாரத்தை வெவ்வேறு பரிணாமங்களில் புரிந்து கொண்டு அடுத்த படைப்புக்குச் செல்ல என் போன்ற நடுநிலை வாசகர்களால் ஒரே வாசிப்பில் முடிந்து விடுவதில்லை.

 

 கடைக்குள் நுழைந்து எதோ ஓரிரு பொருட்களை வாங்கலாம் என்று நினைத்து விட்டு கடைசியில் எல்லா பொருட்களும் பிடித்திருக்கிறதே “எதை வாங்குவது? எதை விடுவது? எதை தவிர்ப்பது ?என்று புரியாமல் திண்டாடும் மனநிலை தான் உங்கள் படைப்புகளை வாசிக்கும்போதும் வருகிறது.

 
“மத்தகம்” ஏற்படுத்திய அதிர்விலிருந்தே எங்களில் சிலர் இன்னும் வெளி வந்திருக்க மாட்டார்கள் …நீங்கள் எழுதித் தள்ளிக்கொண்டு இருக்கிறீர்கள்! முடிந்த வரை எதையும் மிஸ் பண்ணாமல் படிக்க விருப்பம்.

எனக்குத் தெரிந்தவரையில் உங்களது “மத்தகம்” குறு நாவலை மேலோட்டமாக விமர்சனம் செய்திருக்கிறேன் .அது இங்கே கீழே இணைக்கப் பட்டுள்ளது …கூடவே”தோன்றாத் துணை ” வாசித்த பின் எனது எண்ணங்களையும் பதிவு செய்திருக்கிறேன் .நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுங்கள்.

நட்புடன்
பரணி 

http://mrsdoubt.blogspot.com/2008/12/blog-post_19.html

http://mrsdoubt.blogspot.com/2008/12/blog-post_12.html

 

அன்புள்ள பரணி

உங்கள் கடிதம் கிடைத்தது. மத்தகம் பற்றிய கட்டுரையை படித்தேன். கதைக்குள் உங்கள் பயணத்தை அதில் காணமுடிந்தது.

மலையாளத்தில் ‘ஆனை போன வழி’ என்ற சொலவடை உண்டு. காட்டுக்குள் செல்வதற்கு மிகச்சிறந்த பாதை யானை போன வழிதான். முள்களும் குச்சிகளும் ஒடிக்கப்பட்டிருக்கும். புதைசேரு இருக்காது. பாம்பு இருக்காது.

அதைப்போல இலக்கியத்துக்குள்ளும் யானை போன வ்ழியே போவது ஒரு நல்ல விஷயம்தான் போலும்
ஜெ

முந்தைய கட்டுரைநான் கடவுள், இன்னும்
அடுத்த கட்டுரைநான் கடவுள்:இணைப்புகள்