ஆர்.கே.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள்

அன்புள்ள ஜயமோகன்

~நான் ஆர்.கெ.நாராயணனைப் பொருட்படுத்தி படித்தது இல்லை. அது வெள்ளைக்காரர்களுக்காக உருவாக்கபப்ட்ட ஓர் இலக்கிய உலகம் என்ற எண்ணமே காரணம்.~ என்று நீங்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. கோடிக்கணகான இந்தியர்கள் கடந்த 200 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் வேலை செய்து, ஆங்கிலத்திலேயே சிந்தித்துள்ளனர். அது 1947 சுதந்திரம் முன்னும் உண்மை; 60 வருடங்களாக இன்னும் உண்மை. ஆங்கில உலகத்தில் பிரசித்தி பெற்ற புகர் பரிசை இவ்வருடம் நிதியாவில் வாழும் அரவிந்த் அடிகா தன் `வெள்ளைப் புலி` மூலமாக வெற்றி பெற்றுள்ளார். விக்ரம் சேத் என்ற மற்றொரு இந்தியர் `சூடபிள் பாய்` என்ற ஆங்கில நாவலுக்கு அதே பரிசை பெற்றர். இன்னும் சஷி தரூர், அருந்ததி ராய், குஷ்சந்த் சிங் என்று ஆங்கில எழுதுலகில் பல புகழ் பெற்றவர்கள் உள்லனர். தங்கள் உணர்சிகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உலக ஆங்கிலம் ஏற்றுக் கொள்ளும் அளவில் எழுதுகிறனர்.இந்திய வம்சாளியினரான சல்மான் ரஷ்டி, நோபல் பரிசு வி.எஸ்.நாய்பால் போன்ற நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டீரானால், இந்திய ஆங்கில எழுத்து கணிசமாகும். இவர்களுக்கெல்லாம் முன்னோடி ஆர்.கே.நாராயண்.. இவர்களெல்லாம் வெள்ளைகாரர்களுக்காக எழுதுகிறார்கள் என்பது அவர்களை அவமதிப்பதாகும்.

மேலும் தோல் நிரத்திற்க்கும், தாய் மொழிக்கும்,  மொழி பாண்டியத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆங்கிலத்தில் எவ்வளவோ கருப்பர்களும், சீன, ஜப்பானிய, மற்றவர்களும் ஆங்கிலத்தில் பிரசித்தி பெற்றவர்கள்.

வணக்கத்துடன்

வன்பாக்கம் விஜயராகவன்

 

அன்புள்ள விஜயராகவன்

உங்கள் கடிதம். ஆர்.கெ.நாராயணனின் ஒரு நாவலை நான் படித்திருக்கிறேன். சுவாமியும் நண்பர்களும். என் நேரத்தை ஒதுக்குமளவுக்கு முக்கியமான எழுத்தாளராக என்னால் அவரை எண்ணமுடியவில்லை. பி.ஜி.வுட் கவுஸின் ஒரு இந்திய வடிவம், அவ்வளவுதான். அவரைப்பற்றி நம் ஆங்கில செய்தித்தாள்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன என்றுதான் எண்ணுகிறேன். வுட் கவுஸையே நான் பொருட்படுத்துவதில்லை.

 

என் வாசிப்பு ஒருவரை சும்மா வாசிப்பதல்ல. அவர் எனக்கு நிறைய அளிக்கவேண்டும். ஆர்.கெ.நாராயணனைவிட தமிழில் எழுதிய இருபதுபேரை என்னால் சொல்ல முடியும். அவர் எழுதிய அந்நாவலை தமிழில் ஏதாவது ஒரு நல்ல நாவலைப்படித்த ஒருவர் பொருட்படுத்தமாட்டார். தமிழில் அவருக்கு நிகரான எழுத்தாளர் என்றால் தேவன் தான். தேவனே மகத்தான எழுத்தாலர் என்று சொல்பவர்கள் உண்டு,அவர்களிடம் விவாதமே கிடையாது

ஜெ

 

8888

அன்புள்ள ஜெ

கும்பமுனி கதை ஒன்றும் படித்தேன். “பிரைசு நொட்டின நீ… பெருமாளே கைமுட்டி அடிக்காராம், பூசாரி பொம்பளை வரம் கேட்டாராம்’ என்று கும்பமுனி தவசிப்பிள்ளையை நோக்கிச் சொல்வார். நாஞ்சிலைத் தவிர வேறொருவரால் இப்படி எழுத முடியாது. லீவு போட்டு சிரிக்க வேண்டிய பொன் வாசகம் அது.

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்

நாஞ்சிலின் அந்த மொழிவெளிப்பாடு ஒரு மொழியில், ஒரு பண்பாட்டில் ஊறி கிடக்கிறது. அந்த மக்களை அந்த மொழி மற்றும் பண்பாட்டிலிருந்து வெளியே டுக்கும்போது நழுவிச்செல்வது எதுவோ அது இலக்கியத்தில் உள்ள அடிபப்டையான ஒன்று என்பதே என் வாதம்

ஜெயமோகன்

 

அன்புள்ளஜெயமோகன்

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. மொழி வெளிப்பாட்டோடு சேர்ந்து இது நம் கண் முன்னே நிருத்தும் மனிதர்கள், சூழல் என்று விரிவடைந்து கொண்டே செல்கிறது.

ஆனால் இவ்வகை மொழி அடர்த்தியையும் மீறி  வேறு ஏதொ அடிப்படையான வித்தியாசம் ஒன்று உண்டு என்று நினைக்கிறேன். அசோகமித்திரனின் மொழி வெளிப்பாடு எத்தகையது? நல்லெண்ணம் என்று சொல்லியுள்ளீர்கள். இதை எழுதும் கணத்தில் உறையும் அடிப்படை நல்லியல்பு, goodness என்று எடுத்துக்கொள்கிறேன். 

 

சல்மான் ருஸ்டியைப் படிக்கும் போது அதன் புத்திசாலித்தனமே பூடகமாத் தெரிகிறது. ஆனால் அசோகமித்திரனைப் படிக்கும் போது அதன் மெல்லிய அந்தரங்கக் குரலை எப்போதும் உணர்வதுண்டு. இது புத்திசாலித்தனத்தால் அல்ல நல்லியல்பால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட படைப்பு என்ற உணர்வே படிக்கும் போது தோன்றுகிறது. அவ்வகை படைப்புகளோடே வாசகன் அந்தரங்கமாக, மானசீகமாக உரையாட முடியும். சலீம் சினாயுடன் பேச எனக்கு எதுவுமே இல்லை. ஆனால் சந்திரசேகரிடம் நாள் முழுக்க பேச முடியும்.
இதுவே அடிப்படை வித்தியாசமோ என்று தோன்றுகிறது.

 

அமரகாதல்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇணையத்தில் தமிழில் எழுத…
அடுத்த கட்டுரைஇலக்கியம்,அரசியல்:கடிதங்கள்