அரசியல் சரி, தேசியம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் அரசியல் சரிநிலைகள் கட்டுரை படித்தேன். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் மிகச சரியானவை. தர்க்கத்தில், சிந்தனையில் இயறகை பிழைத்தோற்றம் [naturalistic fallacy ]மற்றும் ஒழுக்கவியல் பிழைத்தோற்றம் [moralistic fallacy ]எனும் இருவகையான பிழைகள் பலநேரங்களில் ஏற்பட்டுவிடுகின்றன. இதற்கு சிறந்த விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் கூட விதிவிலக்கல்ல.

 

இயறகை பிழைத்தோற்றம் -க்கு ஹிட்லரின் aryan superiority theory-   ஒழுக்கவியல் பிழைத்தோற்றம்க்கு நம்முடைய நிகழ்கால த்திரிகையாளர்களின்/தலைவர்களின் நிலைப்படும் சிறந்த உதாரணங்கள் என்று நினைக்கின்றேன்.

 

நம்முடைய லட்சியங்களும் கொள்கைகளும் சில நேரங்களில் நம் கண்களுக்கு உண்மையை காட்டாமல் மறைத்துவிடுகின்றன.

எந்தவொரு சமுகத்தின் உண்மை / யதார்த்த நிலைமைகளை ஏற்காமல் அச்சமுகத்தின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. இந்த fallacies பற்றி இணையத்தில் நான் படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரையை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.

http://blogs.psychologytoday.com/blog/the-scientific-fundamentalist/200810/two-logical-fallacies-we-must-avoid




 

அன்புடன், புவனேஸ்வரன்,

 

 

அன்புள்ள புவனேஸ்வரன்

உங்கள் கடிதம். தத்துவத்தில் பிழைத்தோற்றங்களை ஒரு தத்துவ நிலைப்பாடின் இயல்பான அங்கமாகவே காண்கிறார்கள். ஒரு தத்துவநிலைபாடு விவாதம் மூலம் முன்வைக்கபப்ட்டால் அந்த பிழைத்தோற்றம் தவிர்க்கமுடியாதபை உருவாகிவிடும். பிழைத்தோற்றங்களை தவிர்ப்பதற்கே உரையாடல்தன்மை என்ற அம்சம் தத்துவத்தில் முன்வைக்கப்பட்டது. நம் மரபில் இதை சுபக்கம்-பரபக்கம் என்பார்கள். ஆனால் நாம் காலப்போக்கில் இந்த விவாதத்தன்மையை இழந்து விட்டோம். பரபக்கம் இல்லாமல் சுபக்கம் நிற்காது என்ற நம் மரபின் கோட்பாடே மறைந்துவிட்டது. நம் தரப்பை முழுமுதல் உண்மையாக முன்வைக்கும் வேகம் உருவாகிவிட்டது. அதாவது உண்மை கணடடைதல் என்பது கருத்தியலியக்கத்தில் பின்னுக்குத்தள்ளப்பட்டு பிரச்சாரம் முன்னிலைக்கு வந்தது. இன்றுள்ள பெரும்பாலான எழுத்துக்கள்– பேச்சுக்கள் பிரச்சாரங்கள் மட்டுமே.

இதற்கு அடிபப்டைக்காரணம் கருத்துக்களுக்கு நேரடியான அதிகார மதிப்பு ஜனநாயக அமைப்பால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது என்பதே. ஒரு கருத்துத்தரப்பை ஒருவர் நிறுவிவிட்டால் உடனடியாக அதிகாரமும் அவர் கைக்கு வரக்கூடும். ஆகவே கருத்து வெறும் அதிகாரக் கருவியாக ஆகியது. உண்மையுடன் அதற்குள்ள தொடர்பு இல்லாமல் ஆக்கப்படது. இன்று தர்க்கபூர்வமாகச் சொல்லப்படும் கருத்து உள்ளது, அது உண்மை என்பதற்கான எந்த உறுதிப்பாடும் அளிக்கப்படுவதில்லை. இந்த மாற்றத்தை உலகசிந்தனையில் உருவாக்கியமைக்கு மார்க்ஸியத்தின் பங்களிப்பு மிக மிக அதிகம். இந்தவிஷயத்தை பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் பேசியிருக்கிறேன்

இந்நிலையில் பிழைத்தோற்றம் என்பது ஒரு தரப்பின் இயல்பான ஒன்று என்பதை காண்பதே நம்மால் முடிவதில்லை. பொருள்முதல்வாத அடிபப்டை காரணமாகவே தனிமனித அகத்தை அறியும் கண் மார்க்ஸியத்துக்கு இல்லை என்பது அதில் உள்ள பிழைத்தோற்றம். அதை மார்க்ஸியர்கள் ஒரு விவாதத்தரப்பாகக் கொள்ள மாட்டார்கள். அது எதிரியின் தரப்பு என்றே கொள்வார்கள் இல்லையா?

இந்த அம்சமே நம் இதழாளர்களின் சிக்கல்

ஜெ

 

 

 

88

 

அன்புள்ள ஜெ…,

தங்கள் பதிலுக்கு நன்றி…[ வரலாற்றின் வண்டலில்:கடிதங்கள் ]விழுமியங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நான் மறுக்கவில்லை… சுபாஷ் சந்திர போஸை விழுமியமாகக் கற்பிப்பது அவசியமானதும் தேவையானதுமான விஷயமே… என் வருத்தமெல்லாம், விழுமியங்களை உடைப்பதிலும் உருவாக்குவதிலும் நம் சமூகத்தில் உள்ள பாரபட்சம் மற்றும் போதாமை குறித்ததே…

இதைவிட என்னை மிகவும் யோசிக்க வைக்கும் விஷயம் என் மின்னஞ்சலின் இரண்டாம் பகுதியில் உள்ளது:


பெரும்பாலும் கடைநிலையில் இருந்த, குறிப்பிடத்தக்க அறிவு நிலையோ பண்பாட்டு வழக்கங்களோ இல்லாத ஆங்கிலேயர்கள்தாம், துரைமார்களாக உலா வந்திருக்கிறார்கள்.
பிரம்மனின் தலையிலிருந்தும் மார்பிலிருந்தும் பிறந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்ட சாதியினர் இவர்களின் அடிவருடிகளாகத் துதி பாடியது காலம் போட்ட கோலம் தான்…


வெள்ளையர்கள் குறித்த ஒரு கனமான தாழ்வு மனப்பான்மை எல்லாரிடமும் இருந்திருக்கிறது என்பதும், அந்தத் தாழ்வு மனப்பான்மையே உலகம் முழுதும் அவர்கள் காலனியாதிக்கத்திற்கு வித்திட்டது என்பதும் என் அனுமானம். இதுகுறித்த உங்கள் பார்வையை அறிய விழைகிறேன்.
 
நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

வெள்ளையன் அடைந்த வெற்றி மூலமே அந்த தாழ்வுமனப்பான்மை உருவானது. அந்த வெற்றி அவர்களின் அபாரமான யந்திரவியல் தரிசனம் அவரக்ளுக்கு அளித்த ஒன்று– இதைப்பற்றி என் கும்பகோணம் உரையின் தொடக்கத்தில் பேசியிருக்கிறேன். அந்த வெற்றியை நிலைநாட்டவே அவர்கள் கலாச்சாரப்படையெடுப்புகளை உருவாக்கினார்கள். அதிலிருந்து இன்றும் தொடரும் நம் அடிமை மனநிலை உருவானது.

பிராமணர்களைப் பொறுத்தவரை அவர்கள் என்றுமே இந்திய சமூகத்தின் அதிகார உச்சியில் இருந்தது இல்லை. இது ஆளும் வர்கத்தின் அதிகாரத்திலேயே இருந்தது. பிராம்ணர்கள் நம் மன்னர்களின் தூதர்கள், அமைச்சர்கள், புரோகிதர்கள், அலுவலகர்கள் ஆகவே இருந்துள்ளார்கள். அந்த செவகப்புத்தி புதிதாக நாட்டைப்பிடித்த புதிய சத்ரியர்களான வெள்ளையர்களுக்கு விசுவாசமானவர்களாக அவர்களை ஆக்கியது, அவ்வளவுதான்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

 

http://jeyamohan.in/?p=1330  –  தங்களது இந்தப் பதிவு  அமைதியாக அதே சமயம் உறுதியாக  அரசியல்சரிநிலை என்கிற எதிர்மறை சக்தியை விமர்சிப்பதாக இருந்தது.  இன்றைக்கு இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவற்றை இந்த வியாதி பீடித்துள்ளது நிஜம்.   உருவாகி வரும் இளம் தலை முறை  இதழாளர்கள், தொலைக்காட்சி  விமர்சகர்கள் இவர்களது பயிற்சிக் காலத்திலேயே  இத்தகைய போக்குகளைத் தாண்டிச் செயல்படுவது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுத் தரப்படவேண்டும்..   அது நடக்குமா என்பது தெரியவில்லை..

 

// ஒரு நாகரீகமான இந்து பலநூற்றாண்டுக்காலம் இந்த நாட்டில் இந்துமதம் நிகழ்த்திய சாதிக்கொடுமைகளுக்காக வெட்கப்பட்டாகவேண்டும். ஒரு நாகரீகமான கிறித்தவன் உலகமெங்கும் பன்மைக்கலாச்சாரம் மீது கிறித்தவம் நிகழ்த்திய அழித்தொழிப்புகளுக்காக வெட்கியாக வேண்டும். ஓரு நாகரீகமான இஸ்லாமியன் சென்றகாலத்தில் மதவெறிகொண்ட இஸ்லாமிய மன்னர்களால் நிகழ்த்தப்பட்ட அழிவுவேலைகளுக்காக வெட்கப்பட்டாக வேண்டுவோரு கம்யூனிஸ்டு ஸ்டாலினுகாகவும் போல்பாட்டுக்காகவும் தலைகுனிந்தாகவேண்டும். அது நம் ஒவ்வொருவர் மீதும் வரலாறு ஏற்றிவைத்துள்ள சுமை. //

 

ஒவ்வொரு சமூகத்தின் மனச்சாட்சியையும், அறவுணர்வையும் தொட்டுப் பேசும் வரிகள் இவை.    ஏறக்குறைய இதே வரிகளை வேறு யாரோ எப்போதோ சொல்லிப் படித்திருக்கிறேனே  என்று  நினைவு படுத்திப் பார்த்தேன்.. 

 

ஒவ்வொரு மதத் தலைவரும் தத்தம் மதங்களின் செயல்பாடுகளுக்கு முன்வந்து பொறுப்பேற்க வேண்டும் – ஹிந்துக்கள் தீண்டாமைக்கும், கிறிஸ்தவர்கள் சாத்தானுக்கும், முஸ்லிம்கள் மதவெறி மற்றும் பயங்கரவாதத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்”

 

          சொன்னவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் (வாழும் கலை). அதை நான் மொழிபெயர்த்து திண்ணை இதழில் வந்திருந்தது –

           

           http://www.thinnai.com/?module=displaystory&story_id=206041413&format=html

 

மானுட  அறவுணர்வு என்ற இந்தப் புள்ளியில் நீங்கள் இருவரும் ஒன்றுபடுகிறீர்கள்.  மகிழ்ச்சியான விஷயம்.

 

அன்புடன்,

 

ஜடாயு

 

 

அன்புள்ள ஜடாயு,

 

 

ஆம், ரவிசங்கர் மிக கூர்மையாகவே சொல்லியிருக்கிறார்

இதுதான் இந்திய மரபின் குறிப்பாக இந்து மதத்தின் சிறப்பு என்று நான் எண்ணுகிறேன். அது ஆலமரம் போல. அடிமரம் பழமை கொண்டால் விழுதுகள் வழியாக புதிய அடிமரங்களை அது உருவாக்கிக்கொள்ளும். ஆகவே எல்லாவிதமான அற விவாதங்களுக்கும் அது இஅமளிக்கும்

 

ரவிசங்கரைப்போன்றவர்கள் உருவாக்கும் நவீன அறவுணர்வு முக்கியமானது

 


ஜெ

 

 

அன்புள்ள ஜெ,

 

உங்களது எழுத்துகளின் productivity பிரமிக்க செய்கிறது. ஆழமான பல்வேறு விஷயங்களை பற்றி, நீளமான கட்டுரைகள். எப்பொழுதாவது சந்திக்க நேர்ந்தால், எனக்கும் சற்று சொல்லிக் கொடுங்கள். கட்டுரைகளை சிந்தித்து கோர்வையாகவும், அடர்த்தியாகவும் எழுத மிகவும் நேரம் எடுக்கிறது. என்னுடைய போதாமைதான் காரணமாக இருக்க வேண்டும்.

 

தேசம் பற்றி நீங்கள் எழுதியவைகளை படித்து வருகிறேன். 2004 இல் வந்த சீன திரைப் படம் Hero வை பரிந்து உரைக்கிறேன்.

 

2000 வருடங்களுக்கு முன் சிதைந்து கிடந்த சீனாவை போரின் மூலம் ஒருங்கிணைக்க ஃவிந் (qin) தேசத்து மன்னர் முனைகிறார். அவரை கொல்ல பல புரட்சியாளர்கள் முற்பட்டு தோற்று விடுகிறார்கள்.

 

அவர்களில் முக்கியமான மூவரை வென்று (கொன்று) விட்டதாக சொல்லிக் கொண்டு வரும் பெயரில்லாத வீரனின் (Nameless) கதையாக சொல்லப் படுகிறது. ஒருவரை இசையின் ஆழ்மை கலந்த நுணுக்கத்துடன் வென்றதாகவும் (நீள வானம் – Long Sky என்கிற பெயருடையவன்) மற்ற இருவரை (உடைந்த வாள் – broken sword, வீழு பனி – falling snow)  தந்திரமாக (அழகிய நிலா – beautiful moon னை கொண்டு பொறாமை வளர்த்து)  வென்றதாக கூறுகிறான். இதனால் பொன்னும் பொருளும், மன்னருக்கு இருபதடி தூரத்திற்கு வருகிறான்.

 

இந்த கூற்றை நம்பாத மன்னர், புரட்சியாளர்களை தான் ஒருமுறை சந்தித்ததாகவும், பெயரில்லா வீரன் கூறியது போல் அல்லாதவர்கள் என்கிறார். என்ன நடந்திருக்கலாம் என்பதை அவர் கணிக்கிறார்.  அவருக்கு புரியாதது, பெயரில்லா வீரன் ஏன் தயங்குகிறான் (தன்னை கொலை செய்ய) என்பதே.

 

மன்னரின் அறிவு கூர்மையை உணர்ந்த வீரன், மன்னர் ஒருவனை குறைவாக மதிப்பிட்டு விட்டார் என்கிறான். உடைந்த வாள் ஒரு சித்திர எழுத்துக்காரன்.  வாளிற்கு இருபதாவது மாற்றாக ஒரு சித்திர எழுத்து கண்டு பிடித்து வரையும் போதும், மன்னருடன் ஒரு முறை போரிடும் போதும் மன்னர் கொல்லப் பட வேண்டியவர் அல்லர் என உணர்கிறான். கொல்லாமல் திரும்பியதால், வீழு பனி பெருத்த ஏமாற்றம் அடைகிறாள்

 

பெயரில்லா வீரனின் உதவியுடன் புதிய திட்டம் தீட்டப்படுகிறது.

 

இதில் உடைந்த வாள், மன்னர் கொல்லப் படுவதை தடுப்பது ஒன்றே அவன் இலக்ஷியம் என உரைக்கிறான்.

 

இதை கேட்ட மன்னர் மனம் நெகிழ்கிறார். தான் மந்திரிகளும் மற்றவர்களும் புரிந்து கொள்ளாத ஒருங்கிணைப்பை புரட்சிக்காரன் புரிந்து கொண்டுவிட்டான் என.

 

கொல்வதற்கு ஆயுதமில்லாமல் எப்படி பெயரில்லா வீரன் கொள்ளபோகிறான் என மன்னர் வினவ, அவரது உடை வாளை கொண்டே என வீரன் சொல்கிறான்.

 

புரட்சிக்காரன் புரிந்து கொண்டதனாலேயே தான் மரணத்தை சந்திக்க தயாரென தன் உடைவாளை வீசி எறிகிறார் மன்னர். வீரன் அதை எடுத்து, வாளின் மறு முனையை (கூரல்லாத பகுதி) அவர் முதுகில் பொருத்தி – வாளை எடுத்தவர் என்றாவது வாளை கீழே வைத்தே ஆக வேண்டும் என உரைத்து – மன்னர் கொல்லப் படவேண்டியவர் அல்லர் என்பது தனக்கும் புரிந்து விட்டது என்கிற பாணியில் சென்று கோட்டை கதவருகே நிற்கிறான். மன்னரின் சபையின் அரசியலில், மன்னர் (வருத்தத்துடன்) வீரனை கொல்ல ஆணை இடுகிறார்.

 

கொலை செய்ய வந்த புரட்சிக்காரன், மாவீரனாக (Hero) இறக்கிறான். பின்னர் மன்னர் மதில் எழுப்பி மக்களை காக்கிறார். தற்போது மக்கள் தம் நாட்டை நம் நாடு‘ (our land) என அழைக்கிறார்கள்.

 

படமாக்கும் முறையில், செய்திகள் மற்றவர் மூலம் சொல்லப் படுவதால் அதன் வண்ணமும், குணகங்களும் வெவேறு முறையில் பிடிக்கபட்டிருக்கும். வீரனின் சொல் பிம்பங்கள்மன்னரின் பிம்பங்கள், உடைந்த வாளின் விரிந்த நோக்கு, வீழு பனி யின் கோப சித்திரங்கள் – இவை அனைத்தையும் மீறிய பிரபஞ்ச சுழலும் அதன் சோகமும், அதை எதிர் கொள்ளும் மனிதர்கள் – இவையனைத்தையும் உள்ளடக்கி சுதந்திரம் அளிக்கும், ஒருமைப்பாடு உணர்த்தும் நம் நாடு

 

முக்கிய குறிப்பு – ரோஷோமோன் (ஜப்பானிய திரைப்படம்) போல் பலரது எண்ணங்களை திரைவிப்பதால், காண்பது எல்லாம் உண்மையின் ஒரு மெல்லிய துண்டே (one version or slice) என்கிற நோக்கு உதவியாக இருக்கும்.

வீர விளையாட்டுகளின் (marital arts) பட பிடிப்பு பொழுது போக்காகவும் இருக்கும்.. அதையும் தாண்டிய மெல்லிய நீரோட்டம் போல் ஓடும் ஒன்று – தேடுவதற்கு இனிதானது

 

அன்புடன் முரளி

M.Murali
Technology Consultant

 

அன்புள்ள முரளி

 

 

தேசம் என்பது மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கான ஒரு களம். அதை ஒரு நிலப்பகுதி, ஒரு இனம், மொழி ஆகியவற்றால்  கட்டமைப்பது வழக்கம். தேசப்பற்று என்பது அந்த களத்தை தக்கவைக்க, பாதுகாக்க, நீட்டிக்க செய்யப்படும் ஒரு கருத்தியல் கட்டுமானம். இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன்.

 

ஆகவே ஒரு தேசியக்கட்டுமானம் அம்மக்களுக்கு அமைதியையும் மேலான வாழ்க்கையையும் அளிக்குமா என்ற நோக்கிலேயே நான் தேசத்தை அணுகி வருகிறேன். அவ்வகையில் ஒற்றுமை- சகவாழ்வு ஆகியவற்றை முன்வைக்கும் தேசியகற்பிதங்கள் மக்களின் நல்வாழ்க்கைக்கு சாதகமானவை. பிரிவினையை வெறுப்பை முன்வைக்கும் தேசியகற்பிதங்கள் எப்போதுமே அழிவை அளிப்பவை

 

ஆகவே உணர்ச்சி சார்ந்து இப்பிரச்சினையை அணுகக்கூடாதென்றே நான் எண்ணுகிறேன்


ஜெ 

 

 

 

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇசை, மீண்டும் சில கடிதங்கள்