பாப்பா, சாப்பிடு பாப்பா!

அலுவலகத்திலிருந்து ஒரு பணியிடைப் பயிற்சிக்குச் சென்னை சென்றிருந்தேன். ஊழியர்களின் திறனை மேம்படுத்த இவ்வாறு அடிக்கடி பயிற்சிகள் வைப்பது சமீபத்திய பழக்கம். பெரிய கல்லூரி போல, பயிற்சி நிலையம் சென்னையில் இருக்கிறது. எங்கள் துறையில் இப்போதெல்லாம் புதிதாக ஆளெடுப்பதேயில்லை. ஆகவே ஊழியர்களில் நாற்பத்தைந்துக்குக் குறைவானவர்கள் அபூர்வம். அவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு இன்பக்குழப்பச்சிக்கல்.

சென்னைபோன்ற பெருநகரத்துக்கு வருதல், ஹாஸ்டலில் தங்குதல், தினமும் வகுப்புகள், வகுப்புத் தோழர்கள், அறைத் தோழிகள் என திடீரென்று ஒரு கல்லூரிக் காலம் தொடங்கிவிடுகிறது; வயதுபோன காலத்தில் தேனிலவு போல. அதே மனைவி என்பதுதான் சிக்கல். ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு பாவனை.

ஆண்கள் இளமைக்குத் திரும்ப முயல்கிறார்கள். பவுடர் போடுவது, நாலைந்து முறை தலை சீவுவது, உரக்கச் சிரித்துப் பேசுவது, நண்பர்களின் தோள்களில் தட்டிக் கொள்வது, சிகரெட்டை இன்னொருவர் வாயிலிருந்து பிடுங்கி இழுப்பது,  படிகளில் குதித்து இறங்குவது…  பலருக்கு அவர்களின் கல்லூரி நடவடிக்கைகள் நினைவில் இருக்கின்றன. அதன்பின் மாணவவாழ்க்கையில் வந்த ஒரு மாற்றமும் தெரியாது.

ஒரு பெரிசு “ஏண்டா பழி, மெஸ்ஸிலே அய்யன் சோறு போட்டுட்டானா?” என்று இன்னொரு தாத்தாவிடம் கேட்டார். ‘பழி’ என்று ‘பசங்கள்’ சொல்லிக் கொண்ட காலம் ஐம்பதுகளாக இருக்குமோ? அறுபதுகளில் ‘மச்சான்’, எழுபதுகளில் ‘மாப்ள’, எண்பதுகளில் ‘தலைவா’, தொண்ணூறுகளில் ‘மச்சி’, இரண்டாயிரத்தில் ‘பாஸ்’ என இது அடைந்த மாற்றங்களை முதிய மாணவர் இன்னும் அறியவில்லை.

ஒரு குண்டு ஆசாமி படிகளில் தொந்திமேல் படிந்த டி ஷர்ட் குலுங்க, பாய்ந்திறங்கி, கால் மடங்கி, கட்டையைப் பிடித்து நின்று, என்னைப் பர்த்து, “கால் வழுக்கிட்டுது சார்!” என்றார். “அப்டியா?” என்றேன்.

பெண்கள் நேராக எல்.கெ.ஜிக்குப் போய்விட்டார்களோ என்ற ஐயம் ஏற்படும். ஆண்களுக்கு ஆயிரம் கவலைகள். “வாசலில் சாக்கடை அடைத்துக் கொண்டதே, பயல் குத்திவிட்டுவிட்டானா?”, “பெண் டியூஷன் போய் திரும்பிவிட்டாளா?”, “வாழைக்கொல்லைக்கு தண்ணீர் ஊற்றியாகிவிட்டதா?”, “சுப்பையன் காசு கொண்டுவந்தானா?”.

பெண்களுக்கு கவலையே இல்லை. முதலில் சமையல் செய்யவேண்டிய பெரும் பொறுப்பிலிருந்து விடுதலை. அதுவே ஓர் அழியா மந்தகாசமாக முகத்தில் ஒளிவிடுகிறது. எல்லாவற்றையும் கொழுநன் தலையில் கட்டிவிட்டு ராத்திரி கூப்பிட்டு, “ஏங்க காயப்போட்ட துணிகள எடுத்து மடிச்சு வச்சீட்டீங்களா? எத்தன வாட்டி சொல்றது?” என்று அதட்டினால் குடும்பப் பொறுப்பு முடிகிறது. மற்ற நேரமெல்லாம் கல்வி வாழ்க்கை.

பாட்டிகள் கிசுகிசுவென ஓயாமல் தோழிகளுடன் பேசி, கிளுகிளுவென சிரித்தபடி, தோளில் கைபோட்டுக் கோண்டு உலவுவதைக் கண்டேன். சின்ன டப்பாவில் நெல்லிக்காய் வைத்து எடுத்துக் கடித்தார்கள். பத்துமணிக்கு வகுப்பு என்றால் ஒன்பதே முக்காலுக்கு வந்து அமர்ந்து பொறுப்பு மிளிர பென்சில் சீவினார்கள். பேப்பர் புத்தகம் எல்லாம் எடுத்து அடுக்கி வைத்து ஒருமுகப்பட்டு வகுப்பை கவனித்தார்கள்.

“எ·ப்..எம்னா என்னா தெரியுமா?” என ஆசிரியை கேட்க, ஒரு அம்மையார் நரைத்த தலையுடன் கையை தூக்கி எம்பி எம்பி அடங்கினார்.

“சொல்லுங்க மேடம்,” என்றாள் பாடம் நடத்திய இருபத்திநாலு வயதுப்பெண்.

மஞ்சள் பூசிய முகமும் மஞ்சள் படிந்த நரைத்த கன்னத்து மயிர்களுமாக மாணவி எழுந்து வெட்கி காலால் தரையில் ‘ட’ வரைந்து, தோழியை ஓரக்கண்ணால் பார்த்து, மழலையில் “ரேடியோ,” என்றார்.

“ரொம்ப சரிம்மா… உக்காருங்க. ஆனா நாம இத நம்ம பாடத்துல ·ப்ரிக்வன்ஸி மாடுலேட்டர்னு சொல்லுவோம்,” என்றார் ஆசிரியை.

மாணவி அமர்ந்ததும் சக மாணவி அவரை ரகசியமாகக் கிள்ள, ‘போடி’ என இவர்கள் கையால் அடித்தார்கள்.

மாணவர்கள் பலகாலமாகவே குடும்பத் தலைவர்கள். பிறர் பேசிக் கவனிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்கள். ஆகவே தாமரையிலைத் தண்ணீர் போல பாடம் அவர்கள் மேல் உருண்டு சென்றது. இதில் அடையாளச் சிக்கல்கள். “ஒவ்வொருத்தரா பேரு, வேலசெய்ற இடம், கேடர் எல்லாம் சொல்லுங்க,” என்ற மீசைமுளைக்காத ஆசிரியரின் கோரிக்கைக்கு ஒரு நரைத்தலையர், “எம்பேரு V…. மகரிஷி வேதாத்ரி சுவாமிகளோட தியான அமைப்பிலே கன்வீனரா இருக்கேன்.. தியானம்னா என்னன்னாக்க…” என்று தொடங்கினார்.

சிலர் எதையுமே விடாமல் சரசரவென குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவரிடம் ஒரு ஐயம் கேட்டேன். “தெரியலை சார், நான் ஸ்டெனோவா இருக்கேன். குறிப்பில என்னெருக்குன்னு பாக்கிறதில்லை. அப்டியே எழுதிடறது,” என்றார்.

வகுப்பில் பொதுவான விளக்கம் வரும்போது பெரிசுகள் அனுபவ அறிவை வெளிப்படுத்துகின்றன. “இது யூஸர்ஸோட உலகம். புரடியூஸர்ஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் எல்லாருமே அவங்களோட ஸெர்வெண்ட்ஸ் மட்டும்தான்…”

முன்வரிசை பட்டைமூக்குக்கண்ணாடி வலுவாக ஆமோதிக்கிறது. “ஆமா, எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்னு சொல்லியிருக்கே.”

பாடம் நடத்தும் பையன் குழம்பி, வகுப்பிலிருக்கும் மூத்தகுடிமகன்களை பரிதாபமாகப் பார்த்தபின் “…அதனால நாம நம்ம உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் குடுக்கக்கூடாது. நமக்கு நெறைய அசௌகரியங்கள் இருக்கு. ஆனா அது கஸ்டமருக்கு முக்கியமில்லை,” என்றபோது பட்டைக்கண்ணாடிக்கும் அதே அபிப்பிராயம்தான். “…சரியா சொன்னீங்க. மயிர்சுட்டுக் கரியாகுமாண்ணு எங்கூர்ல ஒரு பழமொழி இருக்கு.”

பையன் திக்பிரமை பிடித்து நின்றபின் கழுத்தை இரும்பாக ஆக்கி வேறு பக்கம் திரும்பி மடமடவென ஒப்பிக்கத் தொடங்குகிறான்.

ஹாஸ்டலில் விதவிதமான ஆத்மாக்கள். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து சில காலத்திலேயே இந்தியர்கள் அதிபுத்திசாலிகள் என்பதை புரிந்துகொண்டார்கள். ஆகவே அரசாங்க நிர்வாக அமைப்பை சிவப்புநாடா மூலம் விரிவுபடுத்தினர். இந்தியர்களில் மிகவும் புத்திசாலிகளை தேர்வுசெய்து அவர்களுக்கு அரசு வேலை கொடுத்தார்கள். அவர்கள் ஆறுமாதத்திற்குள் பரம முட்டாளாக ஆவது உறுதி எனக் கண்டார்கள். முப்பது வருடம் சர்வீஸ் உடையவர் என்றால் கேட்கவே வேண்டாம்.

எதிரே என் அறைத்தோழர் வந்தார். “மழையிலே நனைஞ்சிட்டேன் சார். மழை பெஞ்சா அப்டியே நனைஞ்சிடுது பாத்துக்கிடுங்க. மழை பெஞ்சு நனைஞ்சோம்னாக்க ஒடனே ஜலதோஷம் பிடிச்சிடுது.. என்ன சார்?” நான் கடும் தொண்டைப்புண்ணால் அவதிப்பட்டமையால் பதில் பேசும் பொறுப்பு இல்லை

என்படுக்கைக்கு பின்பக்கம் இருவர். ஒருவருக்கு வாழ்க்கையின் உச்சகட்ட சாதனை பெண்ணை எஞ்சீனியரிங் படிக்க வைப்பது. “எம்பேரு W சார். பொண்ணு எஞ்சீனியரிங் படிக்குறா.. மெக்கானிக்கல் எஞ்சீனியரிங்கு சார்,” என்பதே சுய அறிமுகம். நல்ல குரல் வளம்.

எனக்குப் பின்னால் அவரது குரல். மற்றவர் இவரது பேச்சை எப்போதுமே கேட்டுக்கொண்டிருக்கும், கேட்பதற்காகவே பிறந்த, குமாஸ்தாத்மா.

“….அப்பாலே மத்தியான்னம் ஓருமணிக்கு சோறும் பூசணிக்கா கொழம்பும் சேனைக்கெழங்குப் பொரியலும் எல்லாம் கேரியரிலே போட்டுட்டு காலேஜுக்குப் போனேன் சார். கேக்கிறிகள்ல? உள்ர போயி என் பொண்ணைப்பாத்து, ‘சாப்புட வா பாப்பா.’ன்னு கூப்பிட்டேன். பொண்ணு சொன்னா, ‘அப்பா இப்ப சாப்பாடு வேண்டாம் பசிக்கல்லை,’ன்னு…. நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா. அப்பா சாப்பாடு கொண்டாந்திருக்கேன்ல?’ அதுக்கு அவ சொன்னா, ‘இல்லப்பா இப்பதான் காபி சாப்பிட்டேன், வேணாம்,’னு.  அப்ப நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா. சாப்பிடாட்டி உடம்பு என்னத்துக்கு ஆகும்?’ அதுக்கு அவ சொன்னா, ‘இல்லப்பா வயிறு ஒருமாதிரி திம்முன்னு இருக்கு,’ன்னு. நான் அவகிட்டே, ‘பாப்பா சாப்பிடு பாப்பா சாப்பிட்டாத்தானே உடம்பு தேறும்னு சொன்னேன்’…அதுக்கு அவ…”

காய்ச்சலின் குளிரில் போர்த்திப் படுத்திருந்தேன். காதுக்குள் விரலைத் திருகி திரும்பிப் படுத்தேன். ஆனால் குரலை தவிர்க்க முடியவில்லை.

“…அவ சொன்னா, ‘அப்பா சும்மா போங்கப்பா வேலை கெடக்கு’ன்னு. ‘சாப்பிடு பாப்பா சேனைக்கெழங்கு பொரியல் இருக்கு,’ன்னு நான் சொன்னேன்….”

எனக்குக் கண்ணாடியில் குண்டூசியை வைத்து கீறும் பரவசத்தில் உடல் குலுங்கியது. எழுந்தோடி வெளியே போனேன். மழை. நேராக மெஸ்ஸ¤க்கு போய் அமர்ந்து கொண்டேன்

அங்கே Z இருந்தார். இன்னும் சாப்பாடு அறிவிக்கவில்லை. நான் மெஸ்ஸில் சாப்பிடவில்லை. காய்ச்சல், தொண்டைப்புண். எதையும் முழுங்க முடியாது. யுவன் சந்திரசேகர் தன் வீட்டிலிருந்து தினமும் கஞ்சி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் மெஸ்ஸ¤க்குப் பணம் கொடுத்தாகவேண்டும். வயிற்றுப்புண்ணுக்கு நன்றாக பால் சாப்பிடும்படி டாக்டர் அறிவுரை. நேற்று டீ கலப்பதற்காக டிரம்மில் வைக்கப்பட்டிருந்த பாலைப் பிடித்துக் குடிக்கும்போதுதான் Z அறிமுகம். நான் குடிப்பதைக் கூர்ந்து நோக்கியபின் என்னிடம், “பால் எவ்ளவு வேணா சாப்புடலாமா சார்? தனியாச் சார்ஜ் கெடையாதா?” என்றார்.

“கணக்கு ஒண்ணும் இல்லேண்ணு நெனைக்கிறேன்…”

அவர்உடனே தண்ணீர் குடிக்கும் பெரிய டம்ளருடன் சென்று நிரப்பிவந்து என் முன் அமர்ந்தார். “பால் சாப்பிட்டாக்க கண்ணு நல்லா தெரியும் இல்ல சார்?”

“ஆமாங்க,” என்றேன்.

“பால் சாப்புட்டாக்க புத்திவளரும். பிள்ளைகளுக்கு பால் நெறைய குடுக்கணும் சார். இப்ப பாத்தீங்கன்னா இந்த அய்யமாருங்க நல்லா பாலு சாப்புட்டுதான்  அய்யேயெஸ் படிச்சு பெரிய ஆளுகளா ஆயிடறாங்க.” மீண்டும் ஒரு டம்ளர்.

Z அன்றைக்குச் சோர்வாக இருப்பதுபோலிருந்தது. நான் பால் எடுத்துக் கொண்டு Z இடம், “பால் சாப்புடலியா சார்?” என்றேன்.

“இல்ல சார். ஒத்துக்கலை. கழிஞ்சிடுது… பால் எல்லாம் அய்யமாருக்குத்தான்  சார் சரிவரும்… என்னாங்கிறீக?”

X அவரது எ·.எம் ரேடியோவுடன் வந்தார். அதிலிருந்து தீப்பெட்டிக்குள் வண்டு பிடித்துப் பொட்டதுபோல ஒரு ஒலி. நான் வந்த நான்குநாளில் அது வேறு ஒலியையே எழுப்பவில்லை. X இரவுபகலாக அதில் ஈடுபட்டிருந்தார். அதன் அந்தரங்க பாகங்களை கரப்பாம்பூச்சிக்குடலை ஆராய்வதுபோல ஆராய்ந்தார்.

“என்ன சார் பிரச்சினை?” என்றேன்.

“எஃபெம் ரேடியோ சார். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுலே ஒரு ஆளு வித்தான். எம்பத்தஞ்சு ரூவா, நூறு ரூவா சொன்னான்… டிராவல் பண்றப்ப கண்டிப்பா ஒண்ணு கையிலே இருக்கணும்னான் சார்..”

“எதுக்கு?”

“வெதர் கண்டிஷன்லாம் சொல்றான்ல?”

“இத இப்பதான் எடுக்கிறீங்களா?”

“ஆமா சார். வாங்கி மூணுவருசம் ஆச்சு. இப்பதானே டிராவல் பண்றேன்…”

அந்த கருவிக்குள் மின்சாரம் சென்றதும் சுழலும் ஒரு சிறு சக்கரம் மட்டுமே இருக்கும். அது தகரத்தில் உராய்ந்தபடி சுழலும் ஒலிதான் அது… ஆனால் X அதை காதில் வைத்தபடித்தான் எந்நேரமும் காணப்பட்டார்.

ஒருவர் மஃப்ளருடன் வந்தார்.

“என்ன சார் லேட்டு?” என்றார் இன்னொருவர்.

“நோட்ஸ் காப்பி பண்ணிட்டிருந்தேன் சார்”

“இதுக்கு பரிட்சை எல்லாம் ஒண்ணும் இல்லியே?” என்றேன்.

“அதான் சார் பயமா இருக்கு. ஒண்ணுமே புரியல்லை. சரி நோட்ஸாவது எடுத்துப்போமே…”

மொத்தம் நாலுநாள் பயிற்சி. ஆகவே தொடங்கியநாளே தேர்வுக் காய்ச்சலும் ஆரம்பித்தாகிவிட்டது. பெண்கள் விடுதி முன் ஒரு பெரிசு நின்று சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தது. மூட்டுவலி, பேத்தித் தொல்லை பற்றி அல்ல, பாடங்களைப் பற்றி. மாடி வராந்தாவில் இரு கிழவிகள் பாடப் புத்தகத்தை மார்பில் தட்டித் தட்டி மனப்பாடம் செய்கிறார்கள். “எ கஸ்டமர் இஸ் அவர் பேட்ரன் ஆண்ட் ஓனர். எ கஸ்டமர் இஸ் அவர் பேட்ரன் ஆண்ட் ஓனர். எ கஸ்டமர் இஸ்….”

ஒருமாதிரி தடுமாறி மீண்டும் அறைக்குப் போனேன். படுக்கைக்குப் பின்னால் குரல் “…அப்றமா நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா’, …”

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2008 ஜூலை

முந்தைய கட்டுரைஅருண் மகிழ்நன்
அடுத்த கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி முகாம்