ஆன்மீகம், சோதிடம், தியானம்

அன்புள்ள ஜெயமோகன்,

        நேற்று குமுதம் தொலைகாட்சியில் நான் உங்களிடம் அமானுஷ்ய சக்திகளை பற்றி்யும்,ஜாதகம்/நாடி ஜோ்திடம் குறித்தும் கேள்வி கேட்டிருந்தேன். நீங்கள் அதை ஆழ்மனதில் இருந்து ஒரு வ்கையான நுண்ணுணர்வால் செய்யப்படும் விஷயம் என்றும், ஜாதகம் போன்றவற்றின் துணை இல்லாமலேயே, வெறும் நுண்ணுணர்வால்/ஆழ்மன தொடர்பால் அதை நிகழ்த்த முடியும் என்றும் கூறியிருந்தீர்கள். அது அறிவி்யலால் இன்னும் விளக்கப்படாத ஒன்று என்றும்   ்கூறி்னீர்கள். அப்படி என்றால், இதன் மூலம் ஒருவர் எதிரகாலம் மற்றும் கடந்த காலத்தை அறிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?  ஆவி்யுலகம், இறந்தவர்களுடன் பேசுதல் போன்றவையும் இப்படி தானா? இது எல்லாம் குறித்து நீங்கள் கண்ட/கேட்ட அனுபவங்கள் ஏதாவது உண்டா?       
        இதன்  தொடர்ச்சியாக மறுபிறவி குறித்த உங்கள் நி்லைப்பாடு என்ன? அதுவும் அறிவியலால் விளக்கப்படாத ஒன்றல்லவா? நி்றைய ஆன்மீகவாதிகள் மறுபிறவியை ஆமோதிக்கும் வண்ண்மே பேசி்யுள்ளனர்.  சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் உட்பட.
        இதனுடன் சம்பந்தமில்லாமல் நான் நேற்று கேட்க வேண்டும் என்று நினைத்த வேறோரு கேள்வி்யும் உண்டு.  தொலைப்பேசி இணைப்பு கி்டைக்காததால் முடியவில்லை. நீங்கள் பேசி வரும் ஆன்மீக விடுதலை நிலையை அடைந்தவர்கள் என்று சமீப காலங்களில் யாரையாவது கருதுகிறீர்களா? நான் அறிந்த அளவில், ஒஷோ,கிருஷ்ண்மூர்த்தி மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகி்யோரை அப்படி கருதுகி்றேன். நீங்கள் உங்கள் பதிவு ஒன்றில் சௌந்தர் அண்ணா என்ற ஒருவரை அந்நிலையை நோக்கி முன்னேறி கொண்டிருப்பவர்களில் ஒருவராக சொல்லி இருந்தீர்கள். இது குறித்தும் உங்கள் அனுபவங்கள்/கருத்துக்களை கூற முடியுமா?
நன்றி.
அன்புடன்,
பிரபு
அன்புள்ள பிரபு
இவ்விஷயத்தில் நான் என் அனுபவங்களைச் சார்ந்து மட்டுமே நிற்க விரும்புகிறேன். அமானுடமான விஷயங்களை நம்பி அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது ஓர் நிலைபாடு. அவையெல்லாம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்பது இன்னொரு நிலைபாடு. இரண்டுமே உறுதியான கருத்துப்பின்புலம் கொண்டவை. இப்பூமி நம்மால் அறிந்துகொள்ள முடியாத சக்திகளால் மட்டுமே ஆளப்படுகிறது என்பது முதல் நிலை பாடு. இல்லை இது நம்மால் முற்றிலும் விளக்கக் கூடிய பௌதீக விதிகளின்படி மட்டுமே இயங்குகிறது என்பது இரண்டாம் நிலைபாடு. நான் இரண்டையுமே முற்றுமுடிவானதாகக் கருதவில்லை. இவ்விரு நிலைபாடுகளில் எதை முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் நம் அறிதல்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன என்றே எண்ணுகிறேன்.
சோதிடம் மீது நம்பிக்கை கொண்டவன் அல்ல. எனக்கோ என் குழந்தைகளுக்கோ நான் ஜாதகம் சோதிடம் எதையுமே இன்றுவரை பார்க்கவில்லை. ஆனால் நான் சோதிடப்பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன். என் பெரியப்பா கைக்குழந்தையாக இருந்த என் ஜாதகத்தை கணித்து நான் கல்வியால் புகழ் பெறுவேன் [வித்யா கீர்த்தி] என்பதை கணித்திருந்தார். பலமுறை சொல்லி சின்னவயதிலேயே நான் அதைக் கேட்டிருக்கிறேன். என் பெரியப்பா மகன் – பிற்பாடு துறவியாக ஆனவர்– என் உயிர் நண்பன் ராதாகிருஷ்ணன் அகால மரணம் அடைவான் என ஒருவருடம் முன்னரே எனக்குச் சொல்லியிருந்தார். மிகத்தற்செயலாக அவர் அவன் ஜாதகத்தைப்பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிட்டார். ஒன்றுமே சொல்லவில்லை. நான் துருவி துருவிக் கேட்டபோது ஒருவருடம் போகட்டும் என்று மட்டும் சொன்னார் .அப்ப்போது அது என் நம்பிக்கைக்கு உரியதாக படவில்லை. பின்னர் அவன் தற்கொலை செய்துகொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.
சோதிடம் போன்ற கலைகள் மனித உள்ளுணர்வை கூர் தீட்டும் கலைகள் என்றே நான் நினைக்கிறேன். அப்படி உள்ளுணர்வை தீட்டிக்கொண்ட ஒருவர் அப்பாதையில் வெகுதூரம் சென்று காலம் வெளி என மனிதர்களைப்பிணைத்திருக்கும் வலையை பார்த்துவிட முடியும். அப்படி சட்டென்று மிக அசாதாரணமான ஆழங்களை நோக்கிச் சென்று விடும் குறிசொல்லிகளைக் கண்டிருக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால், ஒருசில முறை மனநோயாளிகளும் அபடி சட்டென்று மனித ஆழத்துக்குள் சென்றுவிடுவதை நான் கண்டிருக்கிறேன்.
மனித உள்ளுணர்வு இப்போதுள்ள எளிய பகுத்தறிவு நியதிகளுக்கு உட்பட்டது அல்ல. ஒரு தூக்கணாங்குருவியின் உள்ளுணர்வு கூட அப்படி எளிதில் விளக்கிவிடக்கூடியதல்ல. ஒரு தேனீகூட்டின் பொறியியல் ஒரு தேனீயின் பிரக்ஞைக்குள் ஒதுங்குவதே அல்ல. மனித உள்ளுணர்வு மனிதர்களைவிட மிகபெரியது. உள்ளுணர்வின் வழியாக மானுட சாத்தியமான அறிதல்களைத் தாண்டிச் சென்ற பலரை நான் கண்டிருக்கிறேன். ஏன், ஒரு படைப்பாளியாக நானே உள்ளுணர்வின் ஆழத்தை தினமும் கண்டு கொண்டிருப்பவன். தியானம் செய்யும்போது நாம் காணும் ஆழம் நம்மை அந்த விரிவை உணரச் செய்கிறது. காலத்தின் கட்டங்களை விட்டு நம்மால் வெளியே சென்றுவிட முடியும். அவ்வனுபவமும் எனக்கு உண்டு.
மறுபிறவி குறித்து எனக்கு நேரடியான அனுபவம் ஏதும் இல்லை. ஆகவே அதைப்பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேர்த்த அறிதலும் ஞானமும் அவன் மூளையிலேயே அழிந்துவிடுமா என்ற கேள்விக்கான பதிலே மறுபிறவி என்று நினைக்கிறேன்.
என் வாழ்நாளில் ‘விடுபட்டவர்கள்’ என்று நான் நினைக்கும் சிலரை கண்டிருக்கிறேன். அதைப்பற்றிய்ல்லாம் நானே என் உள்ளுணர்வால் துழாவிக்கொண்டிருக்கிறேன்.ஆகவே அவற்றைப் பற்றி இப்போது விரிவகப்பேசுவது சரியல்ல. ஒரு தருணம் வரட்டும்
ஜெ
***
அன்புள்ள ஜெ
தியானம் குறித்து நீங்கள் நம்பிக்கை கொண்ட்வரா? நீங்கள் தியானத்தை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தியானத்துக்கு அறிவியல் அடிப்படை உண்டா என்ன?
ஜெ.எம்.கேசவ்
அன்புள்ள க்கேசவ்,
நான் தியானத்தைப்பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். தியானம் அறிவியல் சார்ந்ததே. அந்த அறிவியலுக்கு இரண்டாயிரம் வருடத்து தொன்மையும் உண்டு. அதையே நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தில் காண்கிறோம். அது ஓர் ஆன்மீக அறிவியல் நூல்.
தியானம் என்ற அனுபவத்தின் துளியை அனுபவிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். மிக அபூர்வமாக நம் மேல்மனம் அல்லது விழிப்புநிலை அல்லது ஜாக்ரத் நழுவிவிடும் நிலை நமக்கு ஏற்படும். தூக்கம் விழிக்கும் முன்புள்ள சில கணங்கள். காய்ச்சலின் கணங்கள். ஓர் அழகிய காட்சியை கண்ட பரவசத்தின் முகல் கணங்கள். அப்போது நாம் ஒன்றை உணர்கிறோம், நம் பிரக்ஞை என்பது மிக மிக மேலோட்டமானது. நம் அன்றாட வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்கு அடியில் நம்மை இந்த பூமியுடனும் இதன் உயிர்க்குலத்துடனும் இப்பிரபஞ்சத்துடனும் இணைக்கும் ஓர் ஆழ் பிரக்ஞையின் பெருவெளி இருக்கிறது.
அந்த நிலையை பயிற்சி மூலம் அடைய முனைவதே தியானம் என்பது. மேல் மனதை மெல்ல மெல்ல திரைநீக்கம் செய்து அழ்மனதை வெளிக்கொணரும் ஒரு பயிற்சி என்று அதைச்சொல்லலாம் . அதற்கு பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு மரபும் ஒரு வழியைச் சொல்கிறது. விளைவுதான் முக்கியம்.
ஆனால் தியானம் அதன் தீவிர நிலையில் அனைவருக்கும் உரியதல்ல. அதை முழுமையாக ஈடுபட்டுச் செய்வதென்பது ஓர் இனிய அனுபவம் அல்ல. அது உண்மையின் அனுபவம் உண்மைக்கு இனிமையும் கசப்பும் உண்டு அல்லவா? நம்மை நாம் கொடூரமாகவும் கீழாகவும் இருட்டாகவும் உணரும் தருணங்களும் தியானத்தில் உள்ளன. அவற்றை போதிய தத்துவப் பயிற்சியின் துணை இல்லாமல் எதிர்கொள்ள முடியாது. எதிர்பாராத தருணங்கள் கொண்ட ஒரு அயணம் அது என்பதனால் அதற்கு ஒரு குருநாதரின் நேரடி உதவி இல்லாமல் முடியாது.
நம் பிரபல அமைப்புகள் தியானத்தை எளிமையாக்கி ‘காப்ஸுஈல்கள்’ ஆக அளிக்கின்றன. அவை வெறுமே மனதை அமைதிப்படுத்தி ஓய்வுகொள்ளச் செய்கின்றன. அதன் மூலம் நினைவுத்திறனை வளர்க்கின்றன. அவை பெரும்பாலும் இனிய அனுபவங்களே. ஆனால் உண்மையான தியானம் என்பது அப்படிப்பட்டதல்ல. அதில் ஆரம்பகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மனநோயின் அறிகுறி அளவுக்கே மனக் கொந்தளிப்பும் அலைபாய்தலும் உண்டு. அதைக்கடப்பதும் எளிதல்ல
ஆகவேதான் தியானம் என்பது லௌகீகனுக்கு உரியதல்ல என்று சொல்கிறோம். லௌகீகனின் லௌகீக வாழ்க்கை அவனுடைய மனதுக்குள் பிம்பங்களை கொட்டிக்கொண்டிருக்கிறது. தியானம் என்பது பிம்பங்களை சீராக்கி அடுக்கும் ஒரு செயல். ஒரு அமைதியான சூழலில் வசிக்கும் துறவி எதிர்கொண்டு  ஒழுங்கமைக்கும் பிமங்களை விட நூறு மடங்கு பிமங்கள் லௌகீகன் மனதில் இருக்கும். ஒவ்வொருநாளும் புதிது புதிதாக வந்து குவியும். ஆகவேதான் பதஞ்சலி யோகம் யம நியமங்கள் போன்ற புறவாழ்க்கைக் ஒழுங்கை முன்வைத்த இன்னர் தியானத்தைபற்றீப்ப் பேசுகிறது.
தியானத்தைப்பற்றி ஏன் அதிகம் பேசக்கூடாது என்று சொல்லப்படுகிறதென்றால் சொல்லச் சொல்ல அச்சொற்கள் அனைத்தும் தியானம் மீது விழுந்து மூடுகின்றன என்பதனால்தான்
முந்தைய கட்டுரைவன்மேற்கு நிலம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது