பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு…

பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு பையனின் அப்பா எழுதிக்கொண்டது.

மதிப்பிற்குரிய அம்மையார் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் பத்தாம் வகுப்பில் பயின்று வரும் ஜெ.அஜிதன் என்ற மாணவனின் தந்தை நான். இது தங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது மடல். தங்களை ‘தமிழ் மேடம்’ என்று அழைக்கலாகாது என்றும் ‘தமிழம்மா’ என்று அழைக்கவேண்டும் என்றும் தமிழுள்ளத்துடன் நீங்களிட்ட கட்டளையை ஏற்று ஒரு அடிமேலே சென்று என் மகன் ‘தமிழாத்தா’ என்றழைத்தமைக்காக வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கோரியும் நான் ஒரு கடிதத்தை முன்னரே எழுதியிருந்தமை தாங்கள் நினைவுகூரத்தக்கது.

மேற்படி மாணவனுக்கு நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பழந்தமிழ்ப் பாடல்களைக் கற்பிக்கத்தான் வேண்டுமா என்ற ஐயத்தை எழுப்பவே இதை எழுதுகிறேன். இப்பருவம் புதிய ஒலிகளுக்காக காதுகள் திறந்திருக்கும் காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பயல்களின் காதுகளில் சென்றுவிழும் சொற்கள் கண்தெரியாதவன் விதைத்த தோட்டம் போல கண்ட மேனிக்கு வளர்கின்றன. சின்னாள் முன்பு மேற்படி ஜெ.அஜிதன் அவன் தங்கை ஜெ.சைதன்யாவை ”என் பேனாவை எங்கடி வச்சே? ஈட்டு புகணந்தி பாணனீயெங்கயர் தம்வீட்டிருந்து பாடவிடி? அடிச்சு பல்லப்பேத்திருவேன்…” என்று சொல்வதைக் கேட்டு நான் கடும் பீதி கொண்டு அவனை அழைத்து ”என்னடா சொன்னே?” என்றேன்.

”சும்மா. இவ என் பேனாவ எடுத்திட்டு திருப்பி வைக்க மாட்டேங்கிறா அப்பா.”

”அதுசரி…அதுக்கு நீ என்னமோ கெட்டவார்த்தை சொன்னியே?”

”இல்லப்பா அது கெட்டவார்த்தை இல்ல…”

”பின்ன?”

”தெரியல்ல. சும்மா அப்டியே வாயிலே வருது…”

”நீ சொன்னத திருப்பிச் சொல்லு பாப்போம்.”

ஜெ.அஜிதன் மழுப்பலாகச் சிரித்து ”…அது ஒண்ணுமில்லப்பா… சும்மா சவுண்டுதான்” என்றான்.

”அந்த சவுண்டை திருப்பிச் சொல்லு பாப்போம்… என்ன சொன்னேன்னு தெரிஞ்சுக்கிடணுமே?”

ஜெ.அஜிதன் ஒரு மாதிரி முழித்தபின் அவன் தங்கையைப் பார்த்து ”டீ நான் என்னடி சொன்னேன்?”

”திட்டினே.”

”இல்லட்டீ வேற ஒண்ணு சொன்னேனே?”

”சொல்லல்லியே.”

”இவ சரியான கூமுட்ட அப்பா… போடி வல்லைமன்ற நீநயந்தளி…”

நான் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. அன்றெல்லாம் அமர்ந்து அவன் பாடநூல்களை கூர்ந்து கவனித்தபின்னர்தான் இவை தமிழ் பாடல்களின் துணுக்குகள் என கண்டடைந்தேன். ஆயிரங்கால் அட்டை உடைந்து வளயங்களாக கிடப்பது போல பயல் நாவில் தமிழ்பாடல்கள் இவ்வாறு விசித்திர ஒலிகளாக சிதறி பரவிக்கிடக்கின்றன.

நவில்தொறும் நூநயம் என ஆன்றோரும் செந்தமிழும் நாப்பழக்கம் என சான்றோரும் சொல்வது சிறப்பேயெனினும் ஒரு சிறுவன் கொல்லைப்பக்கம் சாக்கடை அடைப்பினைக் குத்திவிடும்போது ”சரியான வண்பயனால்ல இருக்கு” என்பது புரிந்துகொள்ள முடிவதாக இல்லை. ” போட்டீ, நீ என்னோட ஒரு இணரெரிக்குச் சமம்” என தங்கையிடம் சொல்லும்போது அச்சொல்லுக்கு மறைபொருளேதும் உண்டா என மனம் மயக்கம் கொள்கிறது. பேரகராதியை கைநடுங்கப்புரட்டுவதே வாழ்க்கையாக உள்ளது இப்போது. கடைக்குப்போய்வர அவன் அன்னையார் சொல்லும்போது ”நீ எவ்ளவு கொன்னே வெகுளி பெருக்கினாலும் என்னான்னு கேக்க மாட்டேன்” என்று ஒரு பயல் சொல்லுவானாகில் இல்லற அமைதி எங்கனம் பங்கப்படுமென எண்ணிப்பார்க்க கோருகிறேன்.

இதன் நடுவே மரூஉக்கள். [“மரூண்ணாக்க, நீ கிள்ளப்பிடாதுண்ணு சொல்லுவியே அது”] நேற்று ஒரு கட்டைக்குரல் படிப்பொலி காதில் விழுந்தது. ”….மண்தேய்ந்த புகழினார் ம.தி.மு.க மடவார்தம்…” வை.கோபாலசாமியின் மகளிர் அணி பற்றிய பாடல் அல்ல. சிலப்பதிகாரம். ”டேய் இப்டி படிக்கப்பிடாதுடா…” என நான் சொன்னபோது ”போப்பா இப்பல்லாம் பாடம் மாறியாச்சு” என்றான்.

”சரி, நீ தமிழ் படிச்சது போரும். வேறபடி. இங்கிலீஷ் படி” என்று நான் கண்ணிருடன் சொன்னேன்.

”எங்க இங்கிலீஷ் சார் வரல்லை.”

”ஏன்?”

”அவரு சரியான கொங்கலர்தார் அப்பா… மாசம் பத்துநாள் லீவ் போடறார்…”

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது? இதிலே ”அப்பா காமநோய்னாக்க எய்ட்ஸா?” என்று அறிவியல் ஐயம். பகீரிட்டு ”ஏண்டா?” என்றால் ”தலைவிக்கு காமநோய் வந்து உடம்பு மெலியுதே…”

”இது வேறடா… அப்றமா சொல்றேன்.”

”இல்லப்பா. அவ உசிரு போயிரும்னு எழுதியிருக்கே.”

இதை ஒரு மாதிரி விளக்கி முடிப்பதற்குள் பர்ர் என்று வாயை மூடிக் கொண்டு ஒரு சிரிப்பு. ”என்னடா?”

”எங்க தமிழாத்தா சொல்றாங்க அப்பா தலைவி பெரிய பலாப்பழம் மாதிரி இருப்பாளாம். ஆனா அவளோட காம்பு ரொம்பச் சின்னதாம்.”

‘சிறுகோட்டு பெரும்பழம் தூங்கியாங்கு இவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’ என்ற கபிலர் பாடலை புரிந்துகொள்ளும் லட்சணம் இது.

புறநாநூறில் ஒரு கேள்வி. ” ‘ஞாயிறு அனையை நின் பகைவருக்கு திங்கள் அனையை எம்மனோர்க்கே’ என்னடா அர்த்தம்?”

”எனிமீஸக்கு நீ சன்டே . எங்களுக்கெல்லாம் ஹேப்பி மண்டே.”

அன்புள்ள அம்மையீர், தயவுசெய்து இவ்விண்ணப்பத்தை பரிசீலனைசெய்தருள்க. உண்மையிலேயே இம்மாதிரி விடலைகளுக்கு சங்கத்தமிழும் பதினெண் கீழ்க்கணக்கும் தேவையா? [“மேல்கணக்கு இருக்கா அப்பா?”] இப்பாடங்களுக்குப் பதிலாக இன்றைய அரசியல் மற்றும் சினிமா பற்றி சொல்லிக் கொடுத்தால் என்ன?

காலையிலே ஒரு கட்டைக்குரல் ”அஜிதன் இருக்கானா?” என்றது ·போனில். கொடுத்தேன். அதன் பின் குழுக்கூறி பேச்சு. கீழ்க்கண்டவாறு…

”ஃபஸ்ட் பீரியடா? மத்தவருலே யாத தறிந்திசினோரு…. படுத்துவாருல்ல… நீ கையிலே நோட்ஸ் எடுத்துக்கோ.”

”என்னது?”

”கடாவினாருதானே?…வரமாட்டாரு…”

”அவன் கிட்ட சரியான கேடணவு கேட்டியா? நீ அவன் பக்கத்திலே போக வேண்டாம். என்னமாம் சொன்னான்னா ஒரு எஞ்சுறா வச்சு காச்சிடணும்.அப்பதான்லெ புத்திவரும் பயலுக்கு.”

இப்படியே அரைமணி நேரம்.

அம்மையீர், நொந்த நெஞ்சுடன் இதை எழுதுகிறேன். வேறென்ன செய்ய. பார்த்து ஏதேனும் செய்தருள்க.

அன்புடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஜெயமோகன்

[மறுபிரசுரம். முதல்பிரசுரம் 2006 டிசம்பர்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 36
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசகர் விவாத தளம்